திருவெண்ணெய்நல்லூர், ஆக. 06 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அணைக்கட்டு சாலையில் தனியார் நிதி நிறுவனம் வங்கி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாளராக பேரங்கியூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார் (31) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு மர்ம நபர்கள் இந்த வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.9 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். இது சம்பந்தமாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் வங்கி மேலாளர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தனியார் வங்கியில் திருடிய அதே மர்ம நபர்கள் அந்த வங்கிக்கு அருகே உள்ள கீரிமேடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குபேந்திரன் (37) என்பவரின் டிரை ஃப்ரூட்ஸ் கடை மற்றும் பைக் உதிரி பாகங்கள் கடை ஆகிய இரண்டு கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வெள்ளையன் மகன் ஐயப்பன் (53) என்பவரின் உரக்கடையின் பின்னால் கூரை தகடை உடைத்து உள்ளே சென்று கை வரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.