மார்த்தாண்டம், ஜூலை 29 –
காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவரும் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவருமான தங்கபாலு நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார். குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார். பின் நிருபர்களிடம் கூறியதாவது: காங் வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட சொத்துகளை பாதுகாக்க, பராமரிக்க, மீட்டு எடுக்க, நாங்கள் இணைந்து ஒரு குழு அமைத்துள்ளோம். இதற்காக இந்த மாவட்டத்திற்கு வந்துள்ளோம். தமிழக முழுவதும் கோடி கணக்கில் சொத்து உள்ளது. 95 சதவீதம் சொத்து காங்கிரசிடம் வந்துவிட்டது. 5 சதவீதம் சொத்து மிக விரைவில் வரவுள்ளது. நமது அடுத்த இலக்கு ராகுல் காந்தி தலைமையில் அகில இந்திய அளவில் காங். ஆட்சி வரவேண்டும். அதற்காக நாம் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் காங். திமுக கூட்டணி 20 ஆண்டாக வெற்றி கூட்டணியாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தல், சட்டசபை தேர்தல், இரண்டு பார்லி. தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சு என்பது கூட்டணி கணக்கு போடத்தான் செய்வார்கள். அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம், எதிர்க்கவும் மாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் விரும்புகிறோம். அப்படி வந்தால் தான் எங்கள் கூட்டணி மேலும் பலம் பெறும். மக்கள் அதிகமாக ஆதரிப்பார்கள். தமிழக மக்கள் பா.ஜ விற்கு ஓட்டு போட மாட்டார்கள். பல மாநிலங்களில் காங். ஆட்சி இருக்கிறது. சில மாநிலங்களில் வெளியில் இருந்து ஆதரவளிக்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். மதவாதத்தை எதிர்க்க மாநிலங்களில் மதவாதம் வராமல் இருக்க நல்ல முடிவு எடுக்கப்படும்.
காமராஜருக்கு எதிராக யார் பேசினாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இது தொடர்பாக பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். தமிழக தலைவர் செல்வ பெருந்தகை தமிழக முதல்வரை சந்தித்து பேசி இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளார். அகில இந்திய அளவில் பா.ஜ சட்டத்துக்கு புறம்பாக ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தை பொறுத்தளவில் மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது சட்ட ஒழுங்கு மோசம் என்று சொல்ல முடியாது. போலீஸ் துறை சுணக்கம் இல்லாமல் மேலும் பணியாற்ற வேண்டும். காங். கொள்கை என்பது பூரண மதுவிலக்காகும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இதில் உள்ள வருமானத்தை பார்க்காமல், புதிய கடைகள் தமிழகத்தில் திறக்காமல் இருக்கின்ற கடைகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
ஈரோடு தொகுதி திமுக எம்எல்ஏ எம்எல்ஏயாகி ஒரு வருடம் கூட இல்லை. பாவம் கூட்டணியில் சில நேரங்களில் கொடுக்கல் வாங்கல் இருக்கத்தான் செய்யும். ஆனால் எங்கள் உரிமையை கேட்டு பெறுவோம். விட்டுக் கொடுத்தாலும் இணையானதை கேட்டுப் பெறுவோம் இவ்வாறு காங். மாநில முன்னால் தலைவர் தங்கபாலு கூறினார். பேட்டியின் போது குமரி மேற்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், ராபர்ட் ப்ரூஸ் எம்.பி உட்பட பலர் உடன் இருந்தனர்.