கோவை, ஜூலை 19 –
கோவை மாவட்டம் காரமடை, டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரி மற்றும் காரமடை, ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி யூத் லீடர்ஷிப் அவார்ட்ஸ் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு. குமணன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.என்.ரூபா, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், சங்கத்தின் உதவி ஆளுநர் விஜயபிரபு, சங்க உறுப்பினர் சுதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட ரோட்ராக்ட் தலைவர் டாக்டர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசிய உரையில், “இன்றைய இளைஞர் சமுதாயம் வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் தகவல் தொடர்புத்திறன், எதையும் எதிர்கொள்ளும் தைரியம், எதிலும் இணைப்புடன் செயல்படுதல் அவசியம். உங்களுக்குள்ளேயே நிறைய திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் இழந்த நேரத்தை திரும்பப் பெற முடியாது. வாழ்க்கை நமதே. வாழ்ந்து பாருங்கள். வாழ்வு வளமாகும். எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இளைஞர் சக்தி மகத்தான சக்தி” என்று பல கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து நான்கு அமர்வுகளாக நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாசன், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியின் முன்னாள் தலைவர் டாக்டர். பார்த்திபன், கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மாரிமுத்து, மெட் கனெட் கன்சல்டிங் நிறுவனர் சுரேஷ் ஆனந்தகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர்களான டாக்டர். சண்முகப்பிரியா மற்றும் டாக்டர் தேவப்பிரியா, ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.