சங்கரன்கோயில், ஜூலை 25 –
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் ரூபாய் 300 கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்து 3000 நபர்கள் வேலை வாய்ப்பு பெரும் வகையில் சுமார் 150 ஏக்கரில் சங்கரன்கோவில் தொகுதி சின்னகோவிலான்குளம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அரசு அறிவிக்கப்பட்டது. சங்கரன்கோவில் பகுதியில் சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிப்பு பொது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று வெள்ளிக்கிழமை மாலை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு செய்கிறார் எனவும், சிப்காட் தொழில் பூங்கா அமைக்க உள்ள இடத்தை ஆய்வு செய்ய வரும் அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு குருக்கள்பட்டியில் வைத்து மாலை 4.30 மணி அளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாகவும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.