நாகர்கோவில், செப். 2:
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைகளை சீரமைப்பதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலையும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.85 கோடி மதிப்பில் அழகியமண்டபம் சந்திப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிதாக வட்டச்சாலை அமைத்து சாலையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டு, பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நாகர்கோவில் முதல் களியக்காவிளை வரையிலான பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக வில்லுக்குறி பகுதியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



