தக்கலை, மார்ச் 18 –
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து போக்குவரத்து காவலர்களைப் பாதுகாக்க, தமிழகம் முழுவதும் மார்ச் முதல் ஜூன் வரை சாலைகளில் பணியில் இருக்கும் போலீசாருக்கு மோர், பழச்சாறு மற்றும் தர்பூசணி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஜூஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி கோடை காலத்தில் போக்குவரத்து பணியில் இருக்கும் காவலர்களுக்கு வாட்டர்மெலோன் ஜூஸ் வழங்கப்பட்டது. இந்த ஏற்பாடு போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் நிம்மதியாகப் பணியாற்ற உதவும்.
இந்த நிகழ்வானது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மேற்பார்வையிலும் தக்கலை பேருந்து நிலையம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது.



