குளச்சல், ஜூலை 31 –
குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகத்தை டச்சு படையினர் முகாமிட்டனர். இதை அடுத்து திருவிதாங்கூர் மற்றும் டச்சு படையினருக்கு இடையே கடுமையான சண்டை நடந்தது. இரண்டு மாதங்கள் நடந்த இந்த சண்டை 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முடிவுக்கு வந்தது. கடற்கரையில் மாட்டு வண்டிகளில் பெரிய பனை மரங்களை சாய்த்து பெரிய பீரங்கிகள் போன்று மன்னர் மார்த்தாண்டவர்மா தந்திரம் செய்து டச்சுப் படையை சரணடைய செய்ததாக செவி வழி கதைகள் கூறுகின்றன. இதற்கு குளச்சல் மீனவர்கள் பெரும் உதவி செய்தனர்.
இந்த வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் குளச்சல் கடற்கரையில் போர் வெற்றி தூண் அமைத்தார். தற்போது குளச்சல் நகராட்சி சார்பில் இந்த போர் வெற்றி தூண் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த போர் வெற்றியடைந்து இன்று 284-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு மெட்ராஸ் ரெஜிமென்ட் பட்டாலியன் சார்பில் வெற்றி தூணில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மெட்ராஸ் ரஜிமெண்ட் பட்டாலியன் வீரர்கள் குளச்சல் வந்தனர். அவர்கள் வெற்றி தூணை மலர்களால் அலங்காரம் செய்தனர். காலை 10 மணி அளவில் இரண்டாவது பட்டாலியன் அவிநாசி குமார் சிங், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேவவரம், சப் கலெக்டர் வினய்குமார் மீனா, குமரி மாவட்ட ராணுவ வீரர்கள் நல அமைப்பு மேஜர் வி.எஸ். ஜெயக்குமார், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கச் செயலாளர் சுரேஷ் உட்பட முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றி தூணுக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் குளச்சல் நகராட்சி ஆணையர் கன்னியப்பன், லட்சுமிபுரம் கல்லூரி வரலாற்று மற்றும் என்சிசி மாணவர்கள், பேராசிரியர்கள், திருவனந்தபுரம் தணல் அமைப்பு, குமரி ஜவான்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கூட பலர் கலந்து கொண்டனர்.