நாகர்கோவில், ஏப். 27 –
குமரி தேன் உற்பத்திக்கு புகழ்பெற்ற மாவட்டமாகும். இங்குள்ள தேனுக்கு உலகம் முழுவதும் தனி மவுசு உண்டு. மேற்கு தொடர்ச்சி மலை, அடர்ந்த காடுகள் மற்றும் ரப்பர் காடுகள் நிறைந்த பசுமையான கால சூழ்நிலையில் உற்பத்தியாவதால் குமரி மாவட்ட தேனுக்கு உலக மவுசு உண்டு. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகள் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் பழங்குடி மக்கள் காடுகளில் உள்ள மரங்களில் மலைகளில் இயற்கையாகவே தேனீக்கள் கட்டும் கூடுகளில் இருந்து தேன் எடுக்கின்றனர்.
இங்குள்ள தேன் மருத்துவ குணம் மிக்கது. இதற்கு உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தை மையமாகக் கொண்டு குழித்துறை, மஞ்சாலுமூடு, முழுக்கோடு, அருமனை, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, பிணந்தோடு, சேக்கல், குலசேகரம், பேச்சிப்பாறை, மலைவிளை, கொட்டூர், சுருளகோடு, தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் என ஏராளமானோர் தேன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் சீசன் காலங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு சென்று தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் சீசன் சரியாக அமைந்தால் ஆண்டுக்கு 5 லட்சம் கிலோ வரை தேன் உற்பத்தியாகும். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் தேனீ வளர்ப்போரால் அந்த மாநிலத்தில் இருந்து சுமார் 25 லட்சம் கிலோ தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேன் சார்ந்த வணிகம் குமரி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் நடப்பாண்டில் அதிக பனிப்பொழிவு மற்றும் பிப்ரவரி மாதத்தில் மலையோர பகுதிகளில் இயல்பை விட கூடுதல் மழை பெய்ததன் காரணமாக தேனீக்களால் அதிகளவில் தேனை சேகரித்து கூடுகளில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தேனீ வளர்ப்போர் கூறுகின்றனர். இதனால் இம்மாதம் சீசன் முழுமையாக முடிந்த பின்னரும் தேன் உற்பத்தி 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விட்டது என தேனீ வளர்ப்பு விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.



