நாகர்கோவில், ஜூலை 7 –
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்தவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெபிலா (வயது 26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர். நிதின்ராஜ் பி.இ. படித்துள்ளார்.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் ஜெபிலாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திருமணம் நடந்தது. தொடர்ந்து பெண் வீட்டார் சார்பில் மேல்மிடாலம் கூண்டுவாஞ்சேரியில் புதிய வீடு கட்டி கொடுத்தனர். அந்த வீட்டில் ஜெபிலாவும், நிதின் ராஜும் குடும்பம் நடத்தி வந்தனர். நிதின் ராஜ் பி.இ. படித்திருந்த நிலையில் சரியான வேலை இல்லாமல் இருந்தார். மேலும் வெளிநாடு செல்வதாக கூறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஜெபிலாவின் பெற்றோருக்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருடைய உடல் கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதின்ராஜின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே ஜெபிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஜெபிலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஜெபிலாவின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போலீசார் ஜெபிலா எழுதிய டைரியை கைப்பற்றினர். அதில் தன் சாவுக்கு தனது கணவரோ அவருடைய குடும்பத்தாரோ காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.
இதனை ஜெபிலாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் போலீசார் காண்பித்து விளக்கிக் கூறியதால் பல மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.