நாகர்கோவில், நவம்பர் 27 –
குமரி மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அழகுமீனா இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளனர். 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 4ம் தேதி முதல் தற்போது வரை 15,61,354 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 98.02 சதவீதம் ஆகும். இதில் 12,37,466 கணக்கிட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் திரும்பப் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றமும் செய்யப்பட்டு மின்னணு மயமாக்கப்பட்டுள்ளது.
இது மொத்த வாக்காளர்களில் 77.69 சதவீதம் ஆகும். இவ்வாறு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கிட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, அவைகளை மின்னணு மயமாக்கும் பணியானது துரிதமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இதுவரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீடு படிவங்களில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 46972 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் 75727, குளச்சல் 42525, பத்மநாபபுரம் 38806, விலவங்கோடு 43407, கிள்ளியூர் 22285, கணக்கீட்டு படிவங்களும் என மொத்தம் 2,69,722 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படாமல் வாக்காளர்கள் வசம் உள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்காத அனைத்து வாக்காளர்களும் தங்கள் கணக்கீட்டு படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து அந்தந்த பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்குச்சாவடி முகவர்கள் ஆகியவரிடம் தங்கள் படிவங்களை அளித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப ஒப்படைக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்பதையும், இந்த படிவங்களை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



