நாகர்கோவில், ஜூலை 3 –
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2023 – 24ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெரும் ஆசிரியர்கள் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநில தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் திருச்சி தேசிய கல்லூரி வள வளாகத்தில் வரும் ஜூலை 6-ம் தேதி நடைபெற உள்ளது.
விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் ஊக்கத்தொகை தலா ரூ. 10 லட்சம், அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 100 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தக்கலை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஹெலன் மேரி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலா சுதா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.