சிவகங்கை, ஜூலை 04 –
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா கொல்லங்குடி பஞ்சாயத்தில் உள்ளது ஐயுரளிதச்சன்கண்மாய் – எம்.ஜி.ஆர் நகர் . இங்கு பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த எம்.ஜி.ஆர் நகருக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லை என்றும் இதனால் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் முக்கியச் சாலையை சென்றடைவதற்கு அதிக சிரமப்படுவதாகவும் ஏற்கனவே தாசில்தார், பி.டி.ஓ. ஆகியோர்களுக்கு மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும் குறை கூறி வந்தனர் .
இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கோரிக்கை மனுக்களுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இந்த கிராம மக்கள் ஒன்று கூடி நின்றதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் தன்னார்வமாக அவரே அவர்களை அழைத்துப் பேசி மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார். இதில் நம்பிக்கையும், திருப்தியும் அடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர் .