களியக்காவிளை, அக். 2 –
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேரூராட்சிக்கு சொந்தமான மீனச்சல் பகுதியில் உள்ள படிப்பக கட்டடம். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுகாதார துறை சார்பில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கீதா குமாரி தங்கச்சி (61) மூதாட்டி கட்டடம் இருக்கும் நிலம் மற்றும் முன் பகுதியில் உள்ள சாலை தனக்கு சொந்தம் என உரிமை கோரி பணியாளர்களை வரவழைத்து சாலை மற்றும் கட்டடத்தை சுற்றி வேலி அமைக்க முயன்றனர். இதனை அறிந்து அப்பகுதியில் உள்ள மக்கள் வேலி கட்ட விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பெண் ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த பணியாளர்கள் நிலைமையை புரிந்து கொண்டு வேலி கட்டும் பணியை கை விட்டு திரும்ப சென்றனர்.
ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில் இதே பெண் திறப்பு விழாவை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்ட போது பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொது மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை அப்புறப்படுத்தி சுகாதார நிலையத்தை திறந்து வைத்தனர். ஓராண்டுக்கு பின்பு தற்போது மீண்டும் அதே பெண் வேலி கட்டி சாலை மற்றும் சுகாதார நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதால் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



