கருங்கல், ஜூலை 1 –
கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக, மக்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு சட்ட கல்லூரி அமைக்கவேண்டும். வனம் சார்ந்த படிப்புகளை படிக்க வனக்கல்லூரி அமைக்க வேண்டும். கருங்கல் அரசு மருத்துவமனை முழுநேரமும் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
பாரம்பரிய தொழிலாக இருந்த மரபொருட்கள் தயாரித்தல், கோவில் ஆபரணங்கள், கல் சிற்பங்கள் தயாரித்தல், மண்பாண்ட தொழில், கைத்தறி, துணிவேலைபாடுகள் போன்ற அழிந்துவரும் தொழில்களை அரசு நிதி உதவி அளித்து பாதுகாத்து உள்ளூர் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருங்கல் பேரூராட்சி கிளைகள் சார்பாக சுண்டவிளை அரசு மருத்துவமனை முன்பிருந்து நடைபயண பிரச்சாரம் ஆரம்பித்தது.
கருங்கல் கிளை செயலாளர் மரியராஜ் தலைமையேற்றார். கிள்ளியூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் சாந்தகுமார் நடைபயணத்தை தொடங்கி வைத்தார். சுண்டவிளை, உலகன்விளை, நடுத்தேரி, கருமாவிளை, குறும்பனை திருப்பு, காவல்நிலைய சந்திப்பு வழி கருங்கல் ராஜீவ் ஜங்சனில் கிள்ளியூர் கிழக்கு வட்டார செயலாளர் ராஜா நிறைவுசெய்து பேசினார். அலெக்சாண்டர், ராஜாசிங், தங்கசாமி, குமார், அருள்தாஸ், ஜாண்றோஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.