1976-ம் ஆண்டு மதுரையில் வெறும் 11 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனை, இன்று இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கண் மருத்துவ சேவையில் முக்கிய பங்காற்றும் அரவிந்த் கண் காப்பகமாக வளர்ந்துள்ளது. 2026-ம் ஆண்டு தனது 50 ஆண்டுகால சேவையை பொன்விழாவாக கொண்டாடும் அரவிந்த், கடந்த 50 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பாதுகாத்துள்ளது.
டாக்டர் ஜி. வெங்கடசாமியின் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கிய இந்த சேவைப் பயணம், தற்போது 16 மருத்துவமனைகள், 120 Vision Centres மற்றும் 8 சமூக கண் மருத்துவ மையங்களாக விரிவடைந்துள்ளது. பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சிகிச்சை பெறுகின்றனர். 2026 மார்ச் வரையிலான தகவலின்படி, 9.07 கோடி வெளிநோயாளர் வருகைகளும், 1.16 கோடி அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், ஆண்டுதோறும் 3,000-க்கும் மேற்பட்ட இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. கண் மருத்துவ சேவையுடன் கல்வி, ஆராய்ச்சி, கண் வங்கி, பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளிலும் அரவிந்த் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. LAICO மூலம் பல்வேறு நாடுகளின் கண் மருத்துவ நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனையும், Aurolab மூலம் குறைந்த செலவிலான கண் மருத்துவப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரவிந்த் கண் காப்பகத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா செப்டம்பர் 20, 2026 அன்று மதுரையில் நடைபெற்றது. 11 படுக்கைகளுடன் தொடங்கிய இந்த 50 ஆண்டுகால பயணம், அனைவருக்கும் தரமான மற்றும் அணுகக்கூடிய கண் மருத்துவ சேவையை வழங்கும் ஒரு மிகப்பெரிய சேவை இயக்கமாக வளர்ந்துள்ளதை இந்த விழா நினைவுகூர்ந்தது.



