கோவை, ஆகஸ்ட் 04 –
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தின் போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ராம்ராஜ், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.
ஊரகப்பகுதியில் குடிசைகளை மாற்றி அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி, குடிசையில் வசிப்பவர்கள், இலவச வீட்டு மனைப்பட்டா இருந்தும் சொந்தமாக வீடு கட்ட இயலாதவறிய நிலையில் உள்ளவர்கள் என ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை மூலமாக பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் ரூ. 3.50 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் 57 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் 1.99 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு 40 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 17 வீடுகள் கட்டுப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வீடுகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வீட்டின் அளவுகள், பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்துடன் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளியான இலுப்பநத்தம் ஊராட்சி, பெரியார் நகர் பகுதியினை சேர்ந்த வீராசாமி, அவரது மனைவி பாப்பாள் ஆகியோர் தெரிவித்ததாவது: காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி விண்ணப்பத்திருந்தோம். தற்போது கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எங்களுக்கென்று கான்கீரிட் மேற்கூரையுடன் கழிப்பறை, ஹால், சமையலறையுடன் நன்றாக வீடு கட்டப்பட்டு வருகின்றது.
எங்களுக்கென்று சொந்தமாக தனிவீடு வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. இத்திட்டத்தின் எங்கள் கனவை நினவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எங்க குடும்பத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இலுப்பநத்தம் ஊராட்சியில் ரம்யா வீடு முதல் உமா வீடு வரை ரூ.4.60 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, ஏ டி காலனி சாராதா வீடு முதல் சுப்புலெட்சுமி வீடு வரை ரூ.5இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, கலா வீடு முதல் தனபாக்கியம் வீடு வரை ரூ.9.16 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.18.76 இலட்சம் மதிப்பீட்டில் நடை பெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பவன் குமார் க. கிரியப்பனவர்நேரில் பார்வையிட்டு சாலை பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.