நாகர்கோவில், ஜூலை 2 –
குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் இரணியில் முதல் பாறசாலை வரை இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு 2.34.67 ஹெக்டேர் பரப்பளவில் நஞ்சை புஞ்சை மற்றும் வீடுகள் போன்ற பொதுமக்களின் பூர்வீக நிலத்தை கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக பட்டியலில் உள்ள நபர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மற்றும் விசாரணை நடத்த அழைப்பு விடப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்
அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பாகோடு பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜோஸ்லால் இது குறித்து கூறியதாவது: நாங்கள் பாகோடு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமான இடத்தை கடந்த 1974 ம் ஆண்டு ஒருவழி பாதைக்காக ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது. தற்போது இரட்டை ரயில் பாதைக்கு எங்கள் இடத்தை மீண்டும் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.
எங்கள் இடத்தில் அனைத்து மதத்தின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் அமைந்துள்ளன. ஆனால் எங்களது நிலத்திற்கான தற்போதைய சந்தை விலையை தராமல், அடிமாட்டு விலைக்கு எங்களது நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை வைத்து நாங்கள் வேறு இடத்தில் நிலம் வாங்கி வீடு வைக்க முடியாது. அந்த அளவுக்கு அதிகாரிகள் நிர்ணயித்துள்ள விலை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் தொகை அம்மாநில அரசால் வழங்கப்படுகிறது. அது போல் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் அதிகாரிகள் சரியான மதிப்பு தொகையை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அலைக்கழிப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சரியான இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.