திண்டுக்கல், ஜூலை 21 –
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தர கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல்வேறு முறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் ஆஸ்பெட்டாஸ் சீட்டு மட்டுமே மாற்றித்தர முடியும் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். இந்நிலையில் பழைய ஓடுகளை பிரித்து விட்டு தகர கொட்டகை அமைக்க வாகனத்தில் கொண்டு வந்தவர்களை தடுத்து எங்களுக்கு கட்டிடம் தான் வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அருகே உள்ள அங்கன்வாடிக்கும் குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் இதுவரை கட்டிடம் கேட்டு எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறவே நான்கு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேற்கொண்டு எதற்கு நாங்கள் தனியாக மனு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். எனவே அதிகாரிகள் திரும்பி போய் விட்டனர். இதுவரை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்குள் உரிய முடிவெடுக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.