நீலகிரி. ஏப்ரல். 24
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி உலக புவி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பூமியை அதன் வளங்களை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இந்த நிகழ்வினை ஒட்டி கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் போஜராஜன் , கலந்துகொண்டு பேசும் போது மாணவர்கள் முடிந்த வரையில் தங்கள் வீட்டைச் சுற்றி பசுமை பரப்பினை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார். கோத்தகிரி அரிமா சங்கத்தின் தலைவர் ராமச்சந்திர ரெட்டி வாழ்த்துரை வழங்கினார். காலநிலை மீட்டெடுப்பு – பசுமை நீலகிரி திட்டத்தின் திட்ட இயக்குனரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளருமான கே ஜே ராஜு சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசும் போது கூறிய கருத்துக்களாவன –
பூமி இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஒரே கோளாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 15 கோடி கிலோமீட்டர் ஆகும். இந்த தூரம் சற்று குறைந்திருந்தாலும் பூமி வெப்ப கோளாகி இருக்கும். கொஞ்சம் அதிகரித்து இருந்தால் பனியால் உறைந்து போயிருக்கும். இந்த வகையில் பூமியை இயற்கை சரியான இடத்தில் வைத்துள்ளது. மேலும் அனைத்து உயிர்களும் வாழும் வகையில் வடிவமைத்துள்ளது. பூமி தனது 460 கோடி வாழ்நாளில் தன்னுடைய சமநிலையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஐந்து முறை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பூமி ஆறாவது பேரழிவை நோக்கி செல்கிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் . மனித குலத்தின் பேராசையால் பூமியின் வளங்கள் சுரண்டப்பட்டு புவி வெப்பமாகி இன்று காலநிலை மாற்றம் என்ற பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பூமியை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மனித குலம் மேற்கொண்டால் ஒழிய இந்த பூமியை காக்க வேறு வழி இல்லை. 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை இரண்டு டிகிரி சென்டி கிரேட் அளவை தாண்டி விடும். அந்த நிலையில் கோதுமை வளர்ச்சி முற்றிலும் அழிந்துவிடும். அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். மனித குலத்தின் முக்கிய உணவாகிய இந்த தானியங்கள் குறைந்தால் மனிதர்கள் பட்டினியால் சாக வேண்டிய நிலை ஏற்படும். மேலும் புவி வெப்பம் காரணமாக வைரஸ்கள் படையெடுப்பு மிகுதியாகும். இந்த சூழ்நிலையில் பூமியை காக்க மரங்களை நடுவதும் சூரிய, காற்று மற்றும் கடல் அலைகளில் இருந்து மின்னாற்றலை தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இது குறித்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது போன்ற பல செய்திகளை கூறினார். கோத்தகிரி குடிமக்கள் சங்க செயலர் வழக்கறிஞர் முருகன், அரிமா சங்க நிர்வாகிகள் மோகன் குமார் மற்றும் செயலர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை கூறினார்கள். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.