கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திலுள்ள மூன்றம்பட்டி மற்றும் தளி வட்டாரத்தில் உள்ள உனிசேநத்தம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 40 சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு “ஆடுகள் வளர்ப்பு தொகுப்பு” திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது என “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, ஆடு வளர்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், ஆடுகள் பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் 20.03.2025 அன்று சந்தித்து திட்டத்தின் பலன் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் நிறைந்தது மனம் நிகழ்ச்சியின்போது தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு பயன்களைத் தரக்கூடிய அடையாள அட்டைகள், கிராம மற்றும் நகரப் பேருந்துகளில் சுய உதவிக்குழுவினர் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை விலையின்றி எடுத்துச் செல்லவும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகப் பெறப்படும் பயிர்க் கடன், கால்நடைக் கடன், சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன் எனப் பல்வேறு கடன்களைப் பெறுவதில் முன்னுரிமை, இ-சேவை மையங்களில் அனைத்து சேவைகளுக்கும் 10 சதவிகித சேவைக் கட்டணம் குறைவு போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த கிராமப்புற மகளிர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆடுகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆடு வளர்ப்பு என்பது சிறு குறு விவசாயிகளுக்கு ஒரு சிறந்த வாழ்வாதார நடவடிக்கையாகும். ஒரு ஆடு வளர்ப்பு பண்ணை தொடங்குவது குறுகிய காலத்தில் நல்ல இலாபத்தை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான காரணியாகும். கிராமப்புற பொருளாதாரத்தில் மானாவாரி மற்றும் வறண்ட பகுதிகளுக்கு ஆடு வளர்ப்பு ஒரு சிறந்த தொழிலாகும்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு செயல் திட்டம் 2024-25-இன் கீழ், பண்ணை வாழ்வாதார திட்டங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊத்தங்கரை வட்டாரத்தில் உள்ள மூன்றம்பட்டி ஊராட்சியில் 20 சுய உதவிக்குழு பயனாளிகள் மற்றும் தளி வட்டாரத்தில் உள்ள உனிசேநத்தம் ஊராட்சியில் 20 சுய உதவிக்குழு பயனாளிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு 9 பெட்டை +1 கிடா என மொத்தம் 10 ஆடுகள் கொள்முதல் செய்ய ரூ.40 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு செய்யும் பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் 50 சென்ட் நிலம் இருக்க வேண்டும். ஆடு வளர்ப்பிற்குத் தேவையான தீவனப் பயிர்களை அதில் சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.
ஒவ்வொரு ஆடு வளர்ப்புத் தொகுப்பிற்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திலிருந்து ரூ.20 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்படும். இந்த நிதியானது மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு விடுவிக்கப்படும். 9 பெட்டை ஆட்டுக்குட்டிகளையும் 1 கிடா ஆட்டுக்குட்டியையும் வாங்குவதற்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 6% வட்டி விகிதத்தில் ரூ.70 ஆயிரம் கடனாக விடுவிக்கப்படும்.
ஒவ்வொரு உறுப்பினருக்கும் 9+1 ஆடுகள் வாங்க தலா ரூ.70 ஆயிரமும், பயிற்சி மற்றும் கண்டுணர்வுச் சுற்றுலாவிற்காக தலா ரூ.1000 மும், தீவனப் பயிர் சாகுபடிக்கு ரூ.12,000 – மும், நான்கு மாதத்திற்கு ஒருமுறை அடர்தீவனம் கொள்முதல் செலவிற்கு ரூ.4000 -மும், 10 ஆடுகளுக்கு காப்பீட்டுத் தொகை (ஆட்டிற்கு ரூ.250 என்ற விகிதத்தில்) ரூ.2500 -ம், ஆடுகளின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.2000 மும், ஆடுகளின் எடைப் பார்க்கும் இயந்திரம் ரூ.500 என மொத்தம் ரூ.1 இலட்சம் வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய வள பயிற்றுநர்கள் (பண்ணை) மூலம் கடன் தவணைகளை முறையாக உறுப்பினர்களிடமிருந்து பெற்று, தொகுப்பின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதை உறுதி செய்யப்படும். வட்டார அளவிலான பணியாளர்கள் மூலம் மாதத்திற்கு இரு முறை கள ஆய்வு செய்து, தொகுப்பின் தொழில் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) உறுப்பினர்கள் ஆடு வளர்ப்பு அலகினை மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்வையிட்டு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை கால்நடைத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் வழங்குவார்கள். மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை) மற்றும் உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டு தொகுப்பினை ஆய்வு செய்வர்
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஆடுகள் பெற்ற ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி கிராமத்தை சேர்ந்த பயனாளி கீதா (செல்:9629700458) தெரிவித்ததாவது:
நான் ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி கிராமத்தில் எனது இரு மகன்களுடன் வசித்து வருகிறேன். எனது கணவர் கைவிட்ட நிலையில் தனியார் கடையில் வேலை செய்துகொண்டு, மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக சேர்ந்து உள்ளேன். இந்நிலையில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ஆடு வளர்ப்பு குறித்து தெரிவித்தார்கள். இதற்காக ஆடு வளர்ப்பில் ஈடுபாடு உள்ளவர்கள் 20 மகளிர் சேர்ந்து தனி குழுவாக பதிவு செய்தோம். எனக்கு 9 பெட்டை 1 கிடா ஆடு என மொத்தம் 10 ஆடுகள் வழங்கியுள்ளார்கள். எங்கள் பகுதி ஆடு மேச்சலுக்கு ஏற்ற பகுதியாக உள்ளது. மேலும், தீவன புல் வளர்க்கவும், தனியாக நிதி உதவி வழங்கியுள்ளார்கள். எனக்கு சொந்தமாக நிலம் இல்லாத நிலையில் தனியார் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தீவன புல் வளர்த்து வருகிறேன். ஆடுகளுக்கு காப்பீடு செய்து கொடுத்துள்ளார்கள். எனக்கு வழங்கப்பட்ட இந்த ஆடுகளை நன்கு வளர்த்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வோம். என்னைப் போன்ற விழிம்பு நிலையில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, ஆடுகள் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பாக நெஞ்சம் நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை வாழ்வாதார திட்டத்தின் கீழ், ஆடுகள் பெற்ற ஊத்தங்கரை வட்டம், மூன்றம்பட்டி கிராமத்தை சேர்ந்த பயனாளி
சின்னபொன்னு (செல்:7871242593) தெரிவித்ததாவது:
நான் மூன்றம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தேன். மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்த எனக்கு எங்கள் குழுவில் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஆடுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தனர். எனது கணவர் ஏற்கனவே ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ள நிலையில், எனக்கு 9 பெட்டை 1 கிடா என மொத்தம் 10 ஆடுகள் வழங்கினார்கள். நான் வேலைக்கு சென்றாலும் எனது கணவர் ஆடுகளை மேச்சலுக்கு விட்டு பார்த்து கொள்கிறார். மேலும், இந்த ஆடுகள் வளர்ப்பிற்காக தீவனப் பயிர் சாகுபடி செய்யவும், நான்கு மாதத்திற்கு ஒருமுறை அடர்தீவனம் கொள்முதல் செய்யவும் தொகை வழங்கி உள்ளார்கள். இந்த சலுகைகளை பயன்படுத்தி எங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளை நன்றாக பராமரித்து எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே எங்களது நோக்கம். எங்களை போன்ற ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதாரமாகவும், பொருளாதாரம் உயரும் வகையில் ஆடுகளை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நிறைந்த மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு
சு.மோகன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
அ.க.ரமேஷ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) கிருஷ்ணகிரி மாவட்டம்.