நாகர்கோவில் ஏப் 29
குமரி மாவட்டம் வேர் கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட வலியாற்று முகாம் பகுதியில் மலைக்குன்றுகளை உடைத்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் இயற்கை சூழல், நீர் ஆதாரம் மற்றும் மாத்தூர் தொட்டி பாலம் ஆகியவற்றிற்கு பெரிய ஆபத்து ஏற்பட இருப்பதால் உடனடியாக இப்பகுதியில் உள்ள மலைகளை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி அப்பகுதி ஊர்மக்கள் சார்பில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சிக்குட்பட்ட
வலியாற்றுமுகம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் மலைக்குன்றை உடைத்து கனிமங்கள் வெட்டியெடுக்கும் பணியை சில நாட்களுக்கு முன்பு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. எனவே
இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு முக்கிய காரணம்
மலைக்குன்று அழிவும், இயற்கை சமநிலையின் பாதிப்பும். வலியாற்றுமுகம் மலைப்பகுதி, நிலச்சரிவு தடுப்புச் சுவராகவும், இயற்கை பாதுகாப்புப் பிரதேசமாகவும் செயல்படுகிறது.
இம்மலைக்குன்றை உடைத்தால் மழைநீர் சேமிப்பு தடைபடும், நிலச்சரிவு அதிகரிக்கும், மண் உருப்பொழிவு ஏற்படும், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்.
மத்தூர் தொட்டிப்பாலம் தெற்காசியாவின் உயரமான நீரேந்தல் பாலமாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் குடிநீர், விவசாயம், மற்றும் சுற்றுலாத்துறைக்கு முக்கியமான கட்டமைப்பு ஆகவும் செயல்படுகிறது.
இதற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள மலைக்குன்றை உடைத்தால் அதிர்வு ஏற்பட்டு மாத்தூர் தோட்டிப்பாலம் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இப்பகுதியின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, விளை நிலங்கள், குடிமக்கள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்படும்.
சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை மீறுதல் இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள், வன பாதுகாப்பு சட்டங்கள். மற்றும் தமிழ்நாடு சிறு கனிமங்களை அகழ்வதற்கான விதிமுறைகளை முற்றிலும் மீறும். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை அதிகரித்து, எதிர்கால தலைமுறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுதல்.
குவாரிகளிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் வலியாற்றுமுகம் பகுதியில் பரளியாற்றில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபாடு ஏற்பட்டு நீர்வாழ் உயிரினங்கள் ஆற்று நீரை பயன்படுத்துவோர் அதிகமாக பாதிப்படைகின்றனர்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் இப்பகுதியில் புதிதாக மலைகளை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்யுமாறும், ஏற்கனவே இப்பகுதியில் செயல்பட வழங்கப்பட்ட அனுமதிகளை மறு பரிசீலணைக்கு உட்படுத்தி அனுமதியை ரத்து செய்து குமரி மாவட்டத்தின் அடையாளங்களாக கருதப்படும் இயற்கையையும் சுற்றுலா பயணிகள் விரும்பி வந்து செல்லும் மாத்தூர் தொட்டி பாலத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.