நாகர்கோவில், அக்டோபர் 14 –
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் தொடங்கியுள்ள நிலையில் நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் ஆகும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அக்டோபர் 7ம் தேதி அன்று தொடங்கி இருக்கிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான யுஜிசி நெட் தேர்வு மொத்தம் 85 பாடங்களில் நடைபெறும். தேர்வு முறையாக கணினி வழி தேர்வு வடிவில் நடைபெற உள்ளது. தேர்வு காலம் 31 டிசம்பர் 2025 முதல் 7 ஜனவரி 2026 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவுக்குப் பிறகு திருத்தம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களுக்காக நவம்பர் 10 முதல் நவம்பர் 12 வரை திருத்த விண்ணப்ப போர்ட்டல் திறக்கப்படும். இந்த காலத்தில் விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் அவற்றை சரி செய்யலாம்.
மேலும் விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை எண், மற்றும் யுடி ஐடி அடையாள அட்டை போன்ற விவரங்களை துல்லியமாக வழங்க வேண்டும். என என்டிஏ வலியுறுத்தியுள்ளது. தவறான தகவல்கள் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஜிசி நெட் தேர்வு இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அசிஸ்டன்ட் பேராசிரியர் பதவிக்கு தகுதி நிர்ணயிக்கும் முக்கிய தேர்வாகும். இதன்மூலம் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோசிப் வாய்ப்பையும் பெறுவர்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் ugc net.nta.nic.in-ல் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, நேர அட்டவணை மற்றும் பிற அறிவுறுத்தல்களை அந்த இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


