நாகர்கோவில் ஜன 14
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பரவர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டுமென நாம் தமிழர் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில்;
நான் நாம் தமிழர் கட்சி சார்ந்து மக்களுக்கு பொதுத் தொண்டாற்றி சேவை செய்து வருகிறேன். மேற்படி சமூகத்திற்கு தெரிவிப்பது என்னவென்றால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வேதகால தேவி வழிபாட்டு பண்பாடு இருந்த காலகட்டத்தில் இருந்து அதனைத் தொடர்ந்து மகாபாரதம், சங்க நூலான மணிமேகலை, புறநானூறு நூல்களின் வாயிலாக அம்மன் வழிபாடு செய்த காலம் தொட்டு அதனைத் தொடர்ந்து கி.பி.60-80 நூற்றாண்டுகளில் தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலை பற்றி எழுத்தாளர் பெரி பிளசு குறிப்பட்டதில் இருந்து பகவதி அம்மன் கோவிலின் பழமை பற்றி நாம் அறியப்பட்டு அதன் பின்பு பாண்டிய அரசர்களின் வீழ்ச்சிக்கு பின் திருவிதாங்கூர் சமஸ்தானம் நிறுவப்பட்டு பரவர் வம்ச அரசுகளின் ஆட்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பராமரிக்கப்பட்டு 1947 இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் இந்திய சமஸ்தானதுடன் இணைந்து அதன்பின்பு மொழி வாரிய மாநிலம் பிரிக்கப்பட்டபோது 1956 நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டு அதன் பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இணைக்கப்பட்டு மிகச் சிறப்பாக பொதுமக்களுக்கு அம்மன் தரிசனம் கிடைக்கும் வகையில் இன்று வரை செயல்பட்டு வருகிறது.
மேலும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பரவர் வம்ச அரசர்களின் காலகட்டத்தில் கோவிலுக்காகவும் அம்மனை வழிபடும் பொது மக்களுக்காகவும் உருவாக்கப்பட்ட பரவர் குளமானது பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமலும், ஆக்கிரமிப்பாளர்களால், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது.
மேலும் அக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பாபநாசம் கால்வாய் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு கோதை ஆறு பாசனத் திட்டம் ரெகுலேட்டர் கால்வாய் வழியாக அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட பஞ்சலிங்கபுரம் ஊராட்சி உட்பட்ட சுண்டன் பரப்பு கிராம வழியாக பொதுப் பணித்துறைக்கு சொந்தமான நாச்சியார் குளம் எதிர்ப்புறத்திலிருந்து ரெகுலேட்டர் கால்வாய் வழியாக செல்லும் பாபநாசம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டும் சரிவர பராமரிக்கப்படாமலும் இருப்பதால் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பரவர் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர முடியாமல் அக்குளமானது செயல்பாடற்ற நிலையில் உள்ளது.
இக் குளத்தினால் பகவதி அம்மன் கோயிலுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த நன்மையாகும். அக்குளமானது செயல்பாட்டில் இருக்கும் பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு அம்மனை தரிசித்து விட்டு அதன்பின்பு நல்ல தண்ணீரில் குளிப்பதற்காக கோயிலுக்கு சொந்தமான குளத்திலேயே நீராடுவார்கள் மேலும் கோயில் சார்ந்த அனைத்து வழிபாடுகளுக்கும் தண்ணீர் குளத்திலிருந்து எடுத்து செல்வார்கள் இப்போது பராமரிப்பு இல்லாத காரணத்தினால் வழிபாட்டு முறை மாற்றப்பட்டுள்ளது.
எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் பாரம்பரியத்தையும், அப்பகுதி பொதுமக்களின் நன்மை கருதியும், சுற்றுலா பயணிகளின் நன்மை கருதியும் பிரசித்தி பெற்ற தேவி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி பரவர் குளத்தை தூர்வாரி பராமரிப்பு பணி செய்தும் அக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படும் பாபநாசம் கால்வாயின் ஆக்கிரமிப்பு அகற்றி கால்வாயை சீரமைத்து அக்கால்வாய் குடியிருப்பு பகுதியின் அருகே வருவதால் பாபநாசம் கால்வாய் உள்பகுதியில் குழாய் அமைத்து குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது மாவட்ட தலைவர் தீபக் சாலோமன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.