வேலம்பாளையம், நவம்பர் 14 –
திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாடு தற்போது இல்லை என்ற நிலை இருந்தாலும் நம்முடைய பகுதிகளில் மற்ற பயன்பாடுகளுக்காக வழங்கப்படும் உப்பு தண்ணீர் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரை விட உப்புநீரின் தேவை தான் திருப்பூர் மக்களுக்கு குறிப்பாக பணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் பலமுறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தண்ணீர் தேவையை கூறினார். எதற்கும் செவி கொடுத்து கேட்காத மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமான பதில்களை கூறி வந்ததால் அப்பகுதியின் கீதா நகர் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
கடந்த பல நாட்களாகவே உப்பு தண்ணீர் வரவில்லை என தெரிகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் கொடுத்தும் சிறிது நாட்களுக்கு முன்பு புதிய மின் மோட்டார் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில நாட்களில் அந்த மின் மோட்டார் பழுது ஏற்பட்டு தற்போது உப்பு தண்ணீர் முற்றிலும் வரவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலம்பாளையம் சிறு பூலுவபட்டி பிரதான சாலையில்
காலி குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் (பொறுப்பு) காவல் ஆய்வாளர் ஜெகநாதன் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
இதுபோன்ற ஆழ்துளை கிணறுகளில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் தரம் உள்ளவையாக இருக்க வேண்டும்.
இதுபோல மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மட்டும் அடிக்கடி பழுது ஏற்படும் வகையில் தயாரிக்கப்படுமோ என்ற சந்தேகப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். தண்ணீர் பிரச்சனை எல்லாம் பிரதான பிரச்சனைகள் என்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இவற்றையெல்லாம் சரி செய்து விட்டால் இது போன்ற போராட்டங்களை தவிர்த்து விடலாம். ஒருபுறம் துப்புரவு பணியாளர்கள் சம்பளம் தரவில்லை என போராட்டம் மறுபடியும் தண்ணீர் வரவில்லை என மக்கள் போராட்டம் இன்னொரு புறம் குப்பை பிரச்சனைக்காக போராட்டம் திருப்பூர் மாநகராட்சியில் போராட்டமே வாழ்க்கை ஆகிவிடுமா??



