ராமநாதபுரம்,மே.22:-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கடந்த 851 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களும் இணைந்து நல்லிணக்கத்துடன் பாதுஷா நாயகம் தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் நேற்று அதிகாலை நடைபெற்ற மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் ஜாதி மதம் தாண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்காலப் சுல்தான் செய்யது இப்ராஹீம் பாதுஷா நாயகம் தர்ஹாவின் 851-ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மௌலிது எனும் புகழ் மாலை ஏப் 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது.மே 8-ந் தேதி அடிமரம் ஊன்றப்பட்டது.மே 9-ந் தேதி மாலை கொடி ஊர்வலமும்,கொடியேற்றமும் நடந்தது.இன்று அதிகாலை 4 மணிக்கு ஏர்வாடி நல்ல இபுராஹிம் மஹாலில் இருந்து குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல,யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்ஹா ஹக்தார்கள் கொண்டு வந்தனர்.மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து சமுதாயத்தினரும் இழுத்தனர்.வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தனக்கூடுவை மலர் தூவி வரவேற்றனர்.தீப்பந்தம்,பச்சைப் பிறைக்கொடி ஏந்தியவாறு ஊர்வலம் தர்ஹாவை மூன்று முறை வலம் வந்த பின்,அதிகாலை 5 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு வண்ணப் போர்வை மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா,ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.மே 28-ந் தேதியன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு தப்ரூக் எனும் நெய்ச்சோறு அன்னதானம் நடைபெறும்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முஹம்மது பாக்கிர் சுல்தான் லெவ்வை,செயலர் செய்யது சிராஜீதீன்,உதவி தலைவர் சாதிக் பாட்சா,ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் செய்யது இபுராஹிம் சோட்டை ,செய்யது அபுபக்கர் பாதுஷா சோட்டை,ஹாஜி செய்யது ஹீசைன்,செய்யது இஸ்ஹாக்,அபுல் ஹசன்,முர்சல் இபுராஹிம் ஆலிம்,அமீர் ஹம்சா,சுல்தான் செய்யது இபுராஹிம்,அப்துல் கனி,கலீல் ரஹ்மான்,செய்யது இபுராஹிம்,அமீன்,சித்திக்லெவ்வை,அப்துல் ரஹிம்,அம்ஜத் ஹீசைன்,லெவ்வைக் கனி,செய்யது அபுதாஹிர் ஆலிம்,செய்யது இஸ்ஹாக் உள்ளிட்ட தர்ஹா ஹக்தார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில்,கீழக்கரை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
பட விளக்கம்:-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹாவில் 851-ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.