தேனி, நவ. 20 –
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் 500 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த மலை மேல் வைத்தீஸ்வரநாதர் உடனுறை தையல்நாயகி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு தேர் செய்யப்பட்டு வடகரையில் முக்கிய வீதிகளில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஆற்றில் அழகர் இறங்கும் நாளன்று தேரோட்டம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பாக தேர் இழுத்த பொழுது நடைபெற்ற மோதலால் தேர் நிலைநிறுத்தப்பட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தேர் ஓட்டம் தடைப்பட்டது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத் துறையினர் 50 ஆண்டுகளாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை இன்று ஹிட்டாச்சி இயந்திரங்களின் உதவியுடன் நிலை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தேரை எடுத்து மறுசீரமைப்புக்காக இடம் மாற்றப்பட்டது.
மேலும் 50ஆண்டுகளாக தேர் ஓடப்படாத நிலையில் நான்கு சக்கரங்கள் மட்டுமே பழுதடைந்துள்ள நிலையில் தேரில் மற்ற பாகங்கள் அனைத்தும் புத்தம் புதிது போல் காட்சியளித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை வெளியே எடுத்ததால் பெரியகுளம் பகுதி மக்கள் தேருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.



