நாகர்கோவில் ஜூன் 21
பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 35க்கும் அதிகமானோர் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்திற்கு 23 பேர் பலியாகி இருந்தனர். அந்த சோகம் மறைவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்பெல்லாம் அடர் காட்டுப்பகுதிகளிலும், ரகசியமான இடங்களிலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக புழக்கத்தில் இருந்த கள்ளச்சாரயம், திமுக ஆட்சியில் தமிழகமெங்கும் விஷமாகப் பரவியுள்ளது. அதற்கு ஒரு உதாரணம் கள்ளக்குறிச்சி சம்பவம். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு பகுதியில் இந்தத் துயர சம்பவம் நடந்திருப்பது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் நகரம், கிராமம் எனப் பாகுபாடு இல்லாமல் எங்கும் ஆறாக ஓடுவதற்கு சாட்சி!
சட்டம், ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணம் சம்பவத்தின் போதே உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இப்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்காது. எந்த ஒரு சம்பவமும் நடந்த பின்பு அதிகாரிகளை மாற்றுவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதும் தற்காலிகத் தீர்வாக இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாரயத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காததே இந்த பெரும் சோகத்திற்குக் காரணம்.
கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாரயம் காய்ச்சப்படுவது அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த உண்மை. அங்கு மதுவிலக்கு போலீஸார் அவ்வப்போது சோதனை செய்து, கள்ளச்சாராய பேரல்களை அழிப்பதுபோல் அறிக்கை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தனரே தவிர, அதை உள்பூர்வமாக தடுத்து நிறுத்தவில்லை என்பது இதன் மூலம் அம்பலமாகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி தொடங்கி மொத்த காவல்துறை கூடாரமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டம், ஒழுங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தண்டனை? அவரது செயல்படாத தன்மையே கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குக் காரணம். அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.