மார்த்தாண்டம், அக். 25 –
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. மலையோர பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 44.51 அடியை தாண்டியதால் இன்று காலை 7 மணியளவில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் அணையில் தண்ணீர் வரத்து அதிகமானது. இதையடுத்து மீண்டும் ஆயிரம் கன அடி என திறக்கப்பட்டு 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்கனவை கரை புரண்டு ஓடிய கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆறுகளில் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இது போன்று இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை மீண்டும் நீடிக்கப்பட்டது. அருவியில் தடுப்பு வேலி அமைத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விடாமல் போலீசார் மற்றும் பேருராட்சி ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். இன்று விடுமுறை நாள் என்பதாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். குளிக்க தடை என்பது விதிக்கப்பட்டுள்ளதால் அறிவியைப் பார்த்து ரசித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறும் போது: தீபாவளி முடிந்து தொடர் 4 நாட்கள் விடுமுறை அதனை தொடர்ந்து வார இறுதி நாள் இன்றும் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம். ஆனால் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. அதனால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.



