கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி கரையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தன.
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 31,000 கன அடியாக நீடித்து வந்த நீர்வரத்தானது நேற்று காலை நேரத்தில் மேலும் அதிகரித்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்த நிலையில் இன்றும் இதே நிலை நீடித்து வருகிறது.
இந்த நீர் வரத்து காரணமாக ஐந்தருவி சினி பால்ஸ் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. அதிகளவு நீர் வரத்து என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மற்றும் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தொடர்ந்து 14வது நாளாக தடை நீடித்து வருகிறது. காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வரும் கனமழை காரணமாக மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.