தக்கலை மார்ச் 6
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா,நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் குமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பணிகள் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 2023-24 சார்பில் பத்மநாபுபரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை புதிய பேருந்துநிலையம் கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டது. (அரசு மானியம் ரூ.3.20 கோடி மற்றும் நகராட்சி பங்கு தொகை ரூ.3.19 கோடி)
பேருந்து நிலையத்தின் மொத்த இடத்தின் பரப்பளவு 4359 சதுர மீட்டர் ஆகும். இதில் தரைத்தளம் 602.50 சதுர மீட்டர் மற்றும் முதல்தளம் 602.50 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்தில் 11 பேருந்துகள் நிறுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 6 எண்ணிக்கையிலான 4 சக்கர வாகனம் மற்றும் 110 எண்ணிக்கையிலான இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தரைத்தளத்தில் ஒரு உணவு விடுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரகாப்பாளர் அறை, இலவச கழிப்பறை கட்டண கழிப்பறை ஒன்றும் மற்றும் 15 கடைகள் கட்டப்பட உள்ளது. முதல் தளத்தில் 16 கடைகளும் ஒரு பொருட்கள் வைப்பு அறையும், ஓய்வறை ஒன்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழக அலுவலகம், ஒருங்கிணைப்பு அறை ஒன்றும் மற்றும் வைப்பு அறை ஒன்றும், கட்டிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, பத்மநாபபுரம் நகராட்சிய ஆணையாளர் (பொ) ராமேஷ், துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.