சுசீந்திரம் ஏப்-23
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இன்று சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை 10 ம் தேதி உதயமாகும் சூரியன் காலை 7 .10 மணிக்கு சுவாமியின் மேனியில் படும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ் சித்திரை மாதம் 10 ம் தேதி கிழக்கே உதிக்கும் சூரியன் அதிகாலை 6. 45 மணிக்கு மேல் கோயில் முன்புறம் உள்ள அலுப்பு மண்டபம் கடந்து கோபுர வாயில் பின்னால் உள்ள மாக்காளை எனப்படும் நந்தி வீற்றிருக்கும் மண்டபம் வழியாக செண்பகராமன் மண்டபத்தில் நேரடியாக சூரிய ஒளி விழுகிறது. தொடர்ந்து சாஷ்டாங்கமாக சிறிது சிறிதாக உயர்ந்து காலை 7.10 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள தாணுமாலய சுவாமியின் மேனியின் மேல் சூரிய ஒளிபடுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழக்கமான இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை 10 ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளிபடும் விதத்தில் கட்டப்பட்ட கட்டிடக்கலையின் படைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சித்திரை 10 அன்று வாஸ்து நாளாகவும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உகந்த நாளாகவும் கருதப்படுவதால், அதே நாளில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக சுவாமியின் மேனியை சூரிய பகவான் தரிசிக்கும் விதமாக கட்டப்பட்ட இக்கோயிலில் இந்த அற்புதத்தைக் காண அதிகாலையிலேயே பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா பத்து நாட்கள் தொடர்ந்து நடப்பதால் கோயிலின் முன்புறம் பந்தல் கால் நாட்டுவர்.இதனால் சூரிய ஒளி சுவாமியின் முன்பு விழுவதை தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தல் தடுத்து விடுகிறது. ஆனால் இந்த ஆண்டு வரும் 28ம் தேதி சித்திரை திருவிழா ஆரம்பமாவதால் பந்தல் அமைக்கவில்லை. இதனால் நாளை (ஏப்-23) நடக்கும் சூரியபகவானின் சுவாமி தரிசனத்தை அனைவரும் காணலாம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.