இரணியல், ஏப். 23
இரணியல் அருகே பார்வதிபுரம் அருகே உள்ள கள்ளியங்காடு பகுதியில் அருள்மிகு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசக சபை தலைவராக சின்னையன் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி கோவில் அலுவலகத்தில் உள்ள பணப்பெட்டியில் ரூ. 24 ஆயிரத்து 400 ஐ நிர்வாகப் பணிக்காக வைத்துள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லை.
கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தபோது மதில் ஏறி குதித்து வந்த மர்ம நபர் பணத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது. அப்போது கோவிலில் இருந்த 2 சிசிடிவி கேமராக்களையும் உடைத்து இருந்தது தெரிய வந்தது. இது குறித்து சின்னையன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தலக்குளம் புதுவிளை, திங்கள்நகர் கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. சமீப காலமாக கோவில்களில் நடந்து வரும் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.