நாகர்கோவில் அக் 17
கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் நள்ளிரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல்நீருடன் மணலும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் வீடுகளில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் மிதந்தது. மக்கள் கடும் அவதி அடைந்தனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே அதிரடியாக உள்ளது. வங்கக்கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல நகர துவங்கியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், 15 செ.மீ., வரை கன மழை கொட்டி தீர்த்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், சென்னை, எண்ணூர் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் படகுகளை துறைமுகங்கள் மற்றும் கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் நள்ளிரவில், கடல்நீருடன் மணலும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை படித்துறை, முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார், கடலில் இறங்க முயற்சி செய்யும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.