போகலூர், நவ. 6 –
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்க இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி ரோட்டிலும் பிளாட்பாரங்களிலும் பயணிகள் கடும் வெயிலில் உட்கார்ந்து இருக்கும் அவல நிலை நீடிக்கிறது.
ராமநாதபுரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் சுமார் 40 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார். ஆனால் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாதது பெரும் குறையாக தற்போது பயணிகளால் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கும் இந்திய எல்லையான தனுஷ்கோடி அரிச்சல்முனை இடங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளும் ஆன்மீக பக்தர்களும் இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் மூலமாகவும் பஸ் மூலமாகவும் ராமநாதபுரம் வந்து இங்கிருந்து ராமேஸ்வரம் செல்கின்றனர்.
பஸ் மூலமாக வரும் பயணிகள் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமேஸ்வரம் பஸ் பிடித்து செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேளாங்கண்ணி, திருச்செந்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் பிடிப்பதற்காக நீண்ட நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்க வேண்டிய சூழலில் பயணிகள் குறிப்பாக வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ் வரும் வரை உட்கார புதிய பேருந்து நிலையத்தில் இருக்கை வசதியே இல்லை.
இதனால் வயோதிகர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆங்காகே பிளாட்பாரத்தில் தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. இதில் பிளாட்பாரங்களில் கடைகளின் ஆக்கிரமிப்பு பாதி இடத்தை ஆக்கிரமித்ததால் நடந்து செல்லவே பயணிகள் சிரமப்படுகின்றனர். முதலமைச்சர் புதிய பேருந்து நிலையத்தை துவக்கி வைத்து ஒரு மாதம் ஆகியும் பயணிகளின் அடிப்படை வசதியான இருக்கை வசதி ஏற்படுத்தி தராமல் இருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வெளி மாவட்ட வெளி மாநில சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகள் இதனால் ராமநாதபுரம் குறித்து தவறான சிந்தனையில் முகம் சுளித்து செல்லும் நிலை உள்ளது.
“யானை வாங்கியவர்களுக்கு அங்குசம் வாங்க காசு இல்லையே” என்று பயணிகள் நகராட்சி நிர்வாகத்தை குறை கூறும் அளவில் உள்ளது. 40 கோடி செலவு செய்த அரசு 40 ஆயிரம் செலவு செய்து 40 இருக்கைகள் அமைக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் பயணிகள் கடும் வெயிலிலும் மழையிலும் நின்று கொண்டு பஸ் பிடித்து செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதன் மேல் உடனடி கவனம் செலுத்தி பயணிகளின் நலம் கருதி இருக்கை அமைத்து தர வேண்டும், பிளாட்பாரத்தில் கடைகள் ஆக்கிரமிப்பு இருப்பதை தற்போதே தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



