நாகர்கோவில், ஜூலை -02 ,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தென்னக இரயில்வே சார்பில் தக்கலை பேரூந்து நிலையத்தில் சுமார் 12 வருடங்களாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இரயில்வே முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. அது தற்போது ஒரு மாத காலமாக எந்தவித முன்னறிவிப்பு மற்றும் சரியான காரணம் இன்றி மூடப்பட்டுள்ளது.
தற்போது, வெளியூர் செல்லும் மக்கள் முன்பதிவு செய்து பயணிக்க மிகவும் சிரமமாக உள்ளது. நாகர்கோவில், குழித்துறை மற்றும் இரணியல் இரயில் நிலையங்களுக்கு பல மைல்கள் கடந்து சென்று முன்பதிவு செய்ய வேண்டிய நிலையுள்ளது. இதனால் பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள இரயில்வே முன்பதிவு மையத்தினை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் திட்டக்குழு தலைவர் மெர்லியண்ட் தாஸ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.