நாகர்கோவில் – ஜூலை – 07,
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா, மயிலாடி பேரூராட்சி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல் சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4,000 க்கும் மேற்பட்ட கல் சிற்ப தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தினசரி வேலை இருந்தால்தான் அதற்குரிய கூலி கிடைக்கும் என்ற நிலையில் தான் உள்ளனர். ஆனால் இந்த கல் சிற்ப தொழிலுக்கு அடிப்படையான கற்கள் கிடைப்பதிலும் கொண்டு வருவதிலும் இங்குள்ள கல் சிற்பக் கூடத்தினருக்கு மிகுந்த சிரமமாய் உள்ளது. இதனால் கல் சிற்பத் தொழில் சரிவர நடக்காமல் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உலகப் புகழ்வாய்ந்த சிற்பங்கள் செய்யும் மயிலாடியைச் சேர்ந்த இந்த சிற்ப கலைஞர்கள் வேலை சரிவர கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கும் ஒன்றாகும். எனவே அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து உலக அளவில் பிரசித்தி பெற்ற சிற்பங்களை செதுக்குவதில் புகழ்வாய்ந்த இந்த மயிலாடி சிற்பக் கலைக்கூடங்களுக்கு சிற்பத் தொழில் செய்ய கற்கள் கிடைத்திட ஆவன செய்ய தமிழக முதல்வருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி டி செல்வகுமார் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது