சென்னை, ஆகஸ்ட் – 09, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் கட்டுமான துறையை புறக்கணித்த, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்த, ஒன்றிய அரசை கண்டித்து கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் கூட்டமைப்பின் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான மான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு பேட்டியளித்ததாவது :-
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் 2024 – 25 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம் பெறாமல் தமிழ்நாட்டுக்கு எந்தவித நீதியும் ஒதுக்கீடு செய்யாமல்
மிகப்பெரிய துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள்ளது,
குறிப்பாக நாட்டின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு பெருவாரியாக மக்களின் வேலை வாய்ப்புக்கும் துணை புரியும் கட்டுமானம் மற்றும் அனைத்து தொழிலை ஊக்கப்படுத்துவதற்கு எந்தவித அறிவிப்பையும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஜி .எஸ் .டி யை குறைத்திட வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை ஏற்றத்தை கட்டுப்படுத்திட வேண்டும்.தங்கம்,வைரம் மற்றும் பிளாட்டினம் போன்றவற்றுக்கு இறக்குமதி வரியை நிதிநிலை அறிக்கையில் குறைத்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான துறைக்கு உள்ள அதிகபட்சமான ஜி.எஸ்.டி குறைத்து இந்த தொழிலை ஊக்கப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிட முன்வர வேண்டும் .
கட்டுமான துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஜிஎஸ்டியை 5% ஆக குறைத்திட வேண்டும், , கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்திட நிரந்தரமாக செயல் படக்கூடிய விலை நிர்ணய குழுவை அமைத்திட வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக அவர் கூறினார் . மேலும் கூட்டமைப்பின் பொருளாளர் பொறி.எஸ். ஜெகதீசன், விவசாய- தொழிலாளர்கள் கட்சிப் பொதுச் செயலாளர் என். சுந்தர்ராஜ், தலைமை நிலைய செயலாளர். து. ரஜினி ராஜ் உட்பட நிர்வாகிகள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.