நாகர்கோவில் மே 22
குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கையால் வீட்டிலேயே முடங்கிய மீனவர்கள். கடந்த இரண்டு வாரங்களாகவே கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குமரியில் உள்ள அருவி மற்றும் ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால், திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
கனமழை காரணமாக மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65கி. மீ வேகத்தில் வீசும் என்பதாலும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தை சேர்ந்த 49 மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்கள் ஐந்தாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. முட்டம்,சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, கொல்லங்கோடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத நிலையில் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.