இராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி: புதிய பாலம் திறப்பு முதல் கோவில் தரிசனம் வரை!
இராமநாதபுரம், ஏப்ரல் 7
இராமேஸ்வரத்தில் மிகச்சிறப்பாக நிறைவடைந்த பிரதமர் மோடியின் பயணம்: பாம்பன் பாலம் தொடங்கி ராமநாத சுவாமி கோவில் வரை அதிரடி நிகழ்வுகள்!
இலங்கை பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வந்தார். ராணுவ ஹெலிகாப்டரில் மண்டபம் வந்த அவர், பாதுகாப்பு நடைமுறைகளுடன் ராமேஸ்வரத்திற்கு பயணம் செய்தார். தமிழக ஆளுநர் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்களும் அவரை வரவேற்றனர்.
பின்னர் பாதுகாப்பு வாகனங்களுடன் பாம்பன் நோக்கி செல்லும் வழியில், சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். காரில் இருந்தபடியே கையசைத்த பிரதமர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாம்பன் பாலத்திற்கு வந்த பிரதமர், பாலத்தில் பச்சை கொடியை அசைத்து, புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, கடலோர காவல்படை கப்பல் தூக்கு பாலம் கடந்து செல்லும் போது, அதை மெதுவாக ரசித்தார்.
அதன் பிறகு ராமநாதசுவாமி கோவிலில் ஶ்ரீராம நவமியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, விழா மேடைக்கு புறப்பட்டார். வழியெல்லாம் “மோடி மோடி” என மக்களின் உற்சாக வரவேற்பு கிடைத்தது.
விழாவில் உரையாற்றிய பிரதமர், “என் அன்பு தமிழக சொந்தங்களே! வணக்கம்” என தமிழில் உரையை தொடங்கினார். பாம்பன் பாலம் தொழில்நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கும் பாலமாக இருப்பதாக அவர் கூறினார். எளிமையான வணிகத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த புதிய பாலம் உதவியளிக்கும் எனவும் உறுதி தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு, காங்கிரஸ் அரசை விட மூன்று மடங்கு அதிக நிதியை தமிழக வளர்ச்சிக்காக ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மருத்துவம் தமிழில் கற்பிக்க வேண்டும் என்பது தங்களது பெரிய விருப்பம் என கூறிய பிரதமர், மாநில அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேல் சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்திலிருந்து வரும் கடிதங்களில் தமிழில் கையெழுத்து இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் கையெழுத்தையாவது தமிழில் போடக்கூடாதா? என்று கேள்வி.
நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், அண்ணாமலையிடம் கை கொடுத்து, தங்கம் தென்னரசின் தோளில் தட்டிய பிறகு ஹெலிகாப்டரில் மதுரை நோக்கி புறப்பட்டார் பிரதமர்.