நாகர்கோவில் மார்ச் 20
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார்
நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
‘அஞ்சலக அடையாள அட்டை’ என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
அஞ்சலக அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை ரூ.20/- செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதிசெய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் (விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை) ஆகிவற்றை இணைத்து தலைமை அஞ்சலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய அஞ்சல்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்படும்.
அஞ்சலக அடையாள அட்டைக்கான கட்டணம் – ரூ.250/-
பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22/- கூடுதலாக செலுத்த வேண்டும்.
அஞ்சலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து மூன்று வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆதார் அட்டையில் முகவரி திருத்தம்/மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும்இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.