நாகர்கோவில் ஜன 6
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே குமரிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பின்னணியில் ஒரு சார் இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மாணவி கொடுத்த புகாரில் எப்.ஐ.ஆர் கசிந்தது எப்படி என்ற கேள்விக்கு, இணையத்தில் பதிவேற்றிய சில நிமிடங்களில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும், அது தொழில்நுட்பக் கோளாறு என்பதும் எப்படி சரியாக இருக்க முடியும்? அப்படியே தொழில்நுட்பக் கோளாறு என்றால் அதற்குக் காரணமான பொறுப்பு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன்? அதுமட்டும் இன்றி வழக்கின் விசாரணை முழுதாக முடிவடையாத நிலையில் காவல் ஆணையர் இவ்வழக்கில் சார் என யாரும் இல்லை எனவும், குற்றவாளி ஞானசேகரனின் செல்போன் ஏரோபிளைன் மோடில் இருந்தது எனவும் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
வழக்கு இப்போதுதான் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு சென்றுள்ளது. ஆனால் முன்முடிவாகப் பேசிய காவல் ஆணையர் ஏன் துறைரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை? ஞானசேகரனின் மீது 20 வழக்குகள் முன்னரே பதிவாகி உள்ளன. அதில் 5 வழக்குகளில் தண்டனையும் அனுபவித்துள்ளார். இன்னும், 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்குற்றவாளியான ஞானசேகரன் சுதந்திரமாக, காவல்துறை கண்காணிப்பு இன்றியே வலம் வந்தது எப்படி? என்பது உள்ளிட்ட கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் குற்றச்சம்பவம் நடந்தபோது பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் மூவர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்கள் குறித்து மறைக்க வேண்டிய சூழல் ஏன் வந்தது?
அதுமட்டும் இன்றி, முந்தைய அதிமுக ஆட்சியில் அரங்கேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை விட இதன் பின்னணி அதிபயங்கரமாக இருப்பதுபோல் தெரிகிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கும் அளவுக்கு சூழல் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தானே இவ்விசயத்தில் நேரடியாக தலையிட்டு, மக்கள் மன்றத்தில் உரிய விளக்கமும் அளித்து திராவிட மாடல் ஆட்சிக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கும் இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.