குளச்சல், பிப்-15
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோயிலில் வெள்ளை அடித்தல் உள்ளட்ட புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் வெள்ளை அடிப்பதற்காக பணியாளர் வந்த போது, கோவில் தெற்கு பகுதி காம்பவுண்ட் சுவர் அருகே விளக்கு போன்ற வெண்கல பொருள் கிடப்பதை பார்த்துள்ளார்.
இது குறித்து அவர் பூசாரிக்கு தகவல் தெரிவித்தார். பூசாரி கோயிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை கிடந்தது தெரிய வந்தது.
சாமி சிலை வெளியே வீசப்பட்டு கிடந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ போல் பரவியது. உடனடியாக அப்போது பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி சிலையை பார்ப்பதற்காக திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து குளச்சல் போலீஸ் எஸ்ஐ தேவராஜ் மற்றும் குளச்சல் வருவாய் அதிகாரி ஸ்ரீஜித், லட்சுமிபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஜூலியஸ் கிளாட்சன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.
பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பெருமாள் சிலை ஆய்வுக்கு எடுத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சாமி சிலை திருடப்பட்டு இங்கு வீசப்பட்டதா? எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.