திருத்துறைப்பூண்டி வட்டதில் மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மற்றும் திருத்துறைப்பூண்டி எம். ல்.ஏ. வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கச்சனம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து வழங்கினார்கள்.
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம், அம்மனூர், விளத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் கச்சனம் கிராமத்தில் நடைபெற்றது.
இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது….
மக்கள் நேர்காணல் முகாமானது ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமின் குறிக்கோளானது அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து துறையின் துறை அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதே ஆகும்.
துறை வாரியான திட்டங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டு பயன்பெறலாம்.
மக்கள் அனைவரும் அரசு அலுவலகங்களை தேடிச்சென்ற நிலைமாறி, தற்போது தமிழ்நாடு அரசானது மக்களை தேடி வந்து சேவைகளை செய்து வருகின்றது.
அதேபோல், பொதுமக்கள் முன்பெல்லாம் மனுக்களை நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் அளித்து கோரிக்கைகளை நிவார்த்தி செய்து வந்தார்கள் ஆனால், தற்போது அரசு அனைத்து கிராமங்களிலுமே இ-சேவை மையம் அமைத்துக் கொடுத்து அந்த மையத்தின் மூலமாக அவரவர்களுக்கு தேவையான வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும் வசதியும், பட்டா மாறுதல்கள் போன்ற பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெற்றுவருகின்றனர்.
இதுபோன்ற மக்களுக்கான சேவைகள் எளிதில் கிடைப்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இ-பட்டாவிற்கான ஆணையும், 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைக்கான ஆணை ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலும்;, வட்ட வழங்கல் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பிலான பழ திட்டம் கிட்டுகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான், மண்புழு உரம் தயாரிப்பு படுகை என ரூ.24 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகமும் என 133 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், வேளாண்மைத்துறையின் இணை இயக்குநர் பாலசரஸ்வதி, வட்டாட்சியர் குருமூர்த்தி உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.