அரியலூர், ஜூலை:02
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 538 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு Help Line No.10581, Whatsapp No.9489646744 என்ற எண்ணிற்கு அழைக்கலாம், தகவல் தெரிவிப்போரின் விவரம் இரகசியம் காக்கப்படும் என்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அரசு அலுவலர்களிடமும் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தியதுடன், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மேலும் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்களை ஒட்டவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்துகொண்டார்.
தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம், கோவிந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.4.86 இலட்சம் மதிப்பிலான பயிர்கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்



