கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் (06.01.2025) அன்று நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 379 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், வேளாண்மைத்துறை சார்பாக, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில், மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், 4 வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 9 உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் என மொத்தம் 13 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8 -ம் வகுப்பு பயிலும் மாணவி ரா.நேசிகா அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசு வழங்கியதையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) பச்சையப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.