அரியலூர், அக்;29
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்”;; மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, 2023-2024.ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கிய வங்கிகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதன்படி மாவட்ட அளவில் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம், அரியலூர் முதலிடத்தினையும், வங்கி கிளைகளுக்கான முதல் இடத்தை பேங்க் ஆப் இந்தியா, ஏலாக்குறிச்சி தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம், தேவாமங்கலம் இரண்டாம் இடத்தையும், மற்றும் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி, செந்துறை கிளை முன்றாம் இடத்தையும் பெற்றது.
தொடர்ந்து ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயற்கை கால்கள் வேண்டி விண்ணப்பித்த 15 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.13,63,800 மதிப்பில் நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி
வழங்கினார்
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக முடநீக்கியல் வல்லுநர் ஜெயராமன் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்