மார்த்தாண்டம், ஜூன் – 1
பேச்சிப்பாறை அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில் :–
மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பொழிவதால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய தினம் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 42.98 அடியாகவும் நீர் வரத்து 2195 கன அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 55.35 அடியாகவும் நீர் வரத்து 1402 கன அடியாகவும் உள்ளது.
மேலும் தமிழக முதலமைச்சர் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2025 முதல் 28.02.2026 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும் தொடர்ந்து மழை பொழியும் போது நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்படின் அணையின் மதகு பாதுகாப்பு தன்மை, பொதுமக்கள் மற்றும் விவசாய நிலங்கள், நீர் வழித்தடங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர் வரத்து அளவினை அவ்வப்போது கண்காணித்திட நீர்வளத்துறை அலுவலர்கள், பணியளார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.