தென்காசி மே 17
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விரைவில் குற்றாலம் சீசன் துவங்க உள்ளதால் 24 மணி நேரமும் பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க கோரி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக ) கிருஷ்ண முரளி (எ)குட்டியப்பா, முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சரும் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா, ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி, தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் மூர்த்தி, குற்றாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் கணேஷ் தாமோதரன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்
அதன்பின் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் பேசியதாவது,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளது. இதில் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவரது திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட அருவி தான் பழைய குற்றாலம் அருவி. இந்த பழைய குற்றாலம் அருவியில் ஆண்டாண்டு காலமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளித்து மகிழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில் திடீரென கடந்த ஓராண்டு காலமாக காவல்துறையினர் பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் வாகனங்களை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே தடுத்து நிறுத்துவதும் வனத்துறையினர் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க அனுமதிக்க மறுப்பதும் பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பழைய குற்றாலத்தை நம்பி வாழுகின்ற கடை வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர். பாதிக்கப் பட்டுள்ளனர்.இது பற்றி பலமுறை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
எனவே நான் தனிப்பட்ட முறையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் இது பற்றி மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க வருகை தந்துள்ளோம்.
மேலும் இது தொடர்பாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி சட்டமன்றத்தில் பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் இடையூறு செய்வதாக பேசிய போது அதற்கு பதில் அளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பழைய குற்றாலம் அருவி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை அது வழக்கம் போல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். இது சட்டமன்றத்தின் அவைக் குறிப்பில் உள்ளது.
ஆனாலும் இன்று வரையில் பழைய குற்றாலம் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட வில்லை வழக்கம் போல் காவல்துறையினர் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே வாகனங்களை தடுத்து நிறுத்துவதும் மாலை ஆறு மணிக்கு மேல் குளிக்க கூடாது என்று கூறி வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பேசினோம். அவரும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு பழைய குற்றாலம் அருவியில் காவல்துறையினர் வனத்துறையினர் குறுக்கீடு இல்லாமல் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு உயரதிகாரிகளிடம் கலந்து பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.