நாகர்கோவில் அக் 9
என்னை அதிமுகவிலிருந்து நீக்கினாலும் கவலையில்லை என தளவாய் சுந்தரம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.அவரை அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம். இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி வகித்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தோல்வியை தழுவினர். 2011 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் இவர் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி சட்டசபை உறுப்பினராக இருந்து வருகிறார். கட்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் இருந்து வந்த நிலையில் தளவாய் சுந்தரத்திற்கு வழங்கப்பட்ட பதவிகள் பறிக்கப்பட்டன.இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தளவாய் சுந்தரம் கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் வகையில் செயல்பட்டதாகவும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு முரணான மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
அதனால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ தான் வகித்து வரும் அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில்தான் தளவாய் சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து தளவாய் சுந்தரம் கூறியிருப்பதாவது: சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் என் தொகுதியில் நடந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.இதனால் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான். ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என எடப்பாடி என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.