பரமக்குடி,அக். 3: பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய விலங்கியல் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான ஆசிரியரை பிடிக்க போலீசார் நடவடிக்கை.
பரமக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக வெங்கடேசன் (50) பணியாற்றி வருகிறார்.இவர் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் ரீதியாக, இரட்டை அர்த்தங்களில் வகுப்பறையில் பேசி வந்ததாக தெரிகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் வெங்கடேஷ்சனை கண்டித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 29ந்தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் உணர்வை தூண்டும் விதமாக விளக்கம் அளித்து பாடம் நடத்துவதாக மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆசிரியர் வெங்கடேசன் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக எடுத்துக்காட்டுக்கு சினிமா பாலியல் தூண்டல் காட்சிகளை குறித்து பேசி பாலியல் உணர்வை தூண்டும் விதமாக பேசியது உண்மை என தெரிய வந்ததால், பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவானார். தப்பி ஓடிய ஆசிரியர் வெங்கடேசனை பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் மாணவிகளுக்கு மட்டுமல்லாது, அங்கு பணியாற்றும் பெண் ஆசிரியர்களுக்கும் சில பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள், ஆண் ஆசிரியர்களின் மூலம் இருப்பதாக போலீசார் மற்றும் பெண்கள் அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகையால், பெண் ஆசிரியர்களுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.